சைக்கிள், கார், இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டுமா என்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு 38,53,406 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைப் பின்பற்ற மத்திய அரசு தொடர்ந்து வலியறுத்தி வருகிறது.
கூட்டமாக இருக்கும் இடங்களிலும், வெளியே செல்லும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்த நிலையில், கார், சைக்கிள், டூவீலரில் தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பதைத் தெரிவிக்கவில்லை.
மேலும், காரில் தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணிவதில்லை, டூவீலரில் தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணிவதில்லை என்ற புகார்களும் எழுந்தன.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷான் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காரில், சைக்கிளில், டூவீலரில் தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில், “யாரேனும் ஒருவர் காரில் தனியாகச் செல்லும்போதோ, சைக்கிள், இருசக்கர வாகனத்தில் தனியாகச் செல்லும்போதோ முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்படவில்லை.
அதேசமயம், காலை, மாலை நேர நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் எனக் கூட்டமாகச் செல்லும் போது சமூக விலகலைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து இருத்தல் மூலம் மற்றவர்கள் தொற்றில் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மக்களிடம் விழிப்புணர்வு வந்துள்ளதால், கூட்டமாகச் செல்லும் இடங்களில் முகக்கவசம் அணிகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
அதாவது டூவீலர், கார், சைக்கிளில் தனியாகச் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. அவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.