ஷாகீர் பஷீர் 
இந்தியா

காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நடத்துவதற்கு இலக்கை தேர்வு செய்த 22 வயது கடைக்காரர்: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த 2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி அடில் அகமது தர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

ஜம்முவில் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 25-ம் தேதி என்ஐஏ 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 19 தீவிரவாதிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒருவர் ஷாகீர் பஷீர் (22). ஜம்மு - நகர் நெடுஞ்சாலையில் லேத்போரா பாலம் பகுதியில் இவர் மரப்பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார். என்ஐஏ குற்றப்பத்திரிகையில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புல்வாமாவில் கார் குண்டு தாக்குதலை நடத்திய அடில் அகமதுவுக்கு தேவையான வசதிகளை ஷாகீர் பஷீர் செய்து கொடுத்துள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் மாற்றங்கள் செய்து அந்த காரில் வெடிகுண்டுகளை பொருத்த உதவி செய்துள்ளார்.

சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஜெய்ஷ்-இ-முகமது தலைமைக்கு இவர் பரிந்துரை செய்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது கட்டளைகளை பாகிஸ்தான் தீவிரவாதி முகமது உமர் பாரூக் காஷ்மீரில் நிறைவேற்றினார்.

காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் முகமது உமர் பாரூக் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், ஷாகீர் பஷீர் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

SCROLL FOR NEXT