இந்தியா

மடாதிபதிகள் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க கூடாது: நிர்வாண போராட்டத்தால் பரபரப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா மாவட்டம் கவுரிபிதனூரில் சித்ரோட் மிஷன் என்ற ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை மடாதிபதியாக ஆரோர பாரதி சுவாமி இருக்கிறார். இவர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து கவுரிபிதனூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமனஹள்ளியை அடுத்த திப்பகானஹள்ளியில் உள்ள தேசிய சுங்கச் சாவடியில் ஆரோர பாரதி சுவாமியின் காரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.

மடாதிபதியிடம் சுங்க கட்டணம் கேட்ட போது, அதை செலுத்த மறுத்தார். இதனால் சுங்க ஊழியர்களுக்கும் மடாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மடாதிபதி அரோர பாரதி சுவாமி திடீரென தன் ஆடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார். மடாதிபதிகள், சாமியார்கள், சாதுக்கள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க மாட்டோம் என எழுதிக் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சுங்க சாவடி ஊழியர்கள் மடாதிபதியிடம் மன்னிப்புக் கேட்டு கட்டணம் வாங்காமல் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுங்கச் சாவடி ஊழியர்கள் கூறுகையில், ‘‘அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட சிலரின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என தேசிய நெடுஞ்சாலை துறை எங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. மடாதிபதிகள், சாமியார்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க இருக்கிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT