இந்தியா

கன்னட திரையுலகில் போதைப் பொருள் புழக்கம்; 15 பிரபலங்களின் பெயர்களை அளித்த இயக்குநர்: தமிழகத்தை சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகாவிடம் விசாரணை

இரா.வினோத்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு கன்னட திரையுலகினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 பேரையும் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில், 'சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர். அங்குள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர், வேலை தேடி பெங்களூரு வந்துள்ளார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த ரவீந்திரன், கொச்சியை சேர்ந்த அனூப் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அனூப் கூறியபடி அனிகாவும், ரவீந்திரனும் பெங்களூருவில் போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆண்டி ஜம்போ என்பவரிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கி, பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுக்கு வீடுகளுக்கே சென்று விற்றுள்ளனர்.இந்நிலையில் கன்னட திரைப்பட இயக்குநரும், பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் இந்திரஜித் லங்கேஷ் கூறியதாவது:

எனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருக்கிறேன். அதே போல கடந்த சில ஆண்டுகளில் நடந்த போதைப் பொருள் பரிமாறப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளின் விபரங்களையும் தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக எனக்கு பகிரங்க மிரட்டல் விடுப்பவர்களைக் கண்டு நான் அஞ்சவில்லை.

சமூகத்துக்கு அழிவை ஏற்படுத்தும் போதைப் பொருளை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அடுத்த தலைமுறையினரும் போதை பொருட்களுக்கு பலியாவதை தடுக்க வேண்டும். திரையுலகுக்கோ, தனிப்பட்ட நபருக்கோ எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் செயல்படவில்லை.

இவ்வாறு இந்திரஜித் லங்கேஷ் கூறினார்.

இதனிடையே பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT