கோப்புப்படம் 
இந்தியா

கடன் தவணை செலுத்த அவகாசம் பெறுவதால் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்து தண்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வாதம்

பிடிஐ

கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. கடன் தவணைகளைச் செலுத்த அவகாசம் பெறுகிறார்கள் என்பதற்காக, நேர்மையான வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கு வட்டிக்கு வட்டி விதித்து தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வாதிட்டனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலி யுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்குப் போதிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற வட்டி ரத்து முடிவுகளை எடுக்க முடியும். ஆனால், முடிவுகளை எடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் வசதியாக மத்திய அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நீதிபதி அசோக் பூஷண் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒரு வாரகால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “கடன் தவணைகள் செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

ஆனால், வட்டிக்கு வட்டிக்கு விதப்பதை ரத்து செய்வது குறித்து வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை ஆலோசித்த பின்புதான் தெரிவிக்க முடியும். அதற்கு அவகாசம் தேவை” எனக் கோரினார்.

இதையடுத்து, வழக்கை புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு முன் இறுதி வாதம் நடந்தது. மனுதாரர் கஜேந்திர சர்மா தரப்பில் வழக்கறிஞர் ராஜீவ் தத்தா ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''வங்கிக் கடனுக்கான தவணை செலுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி திட்டம் கொண்டு வந்தது. அவகாசத்துக்குப் பின் மீண்டும் தவணைகளைச் செலுத்தப் போகிறோம் என நாங்கள் நினைத்தோம்.

ஆனால், அவகாச காலத்தில் கூட்டு வட்டி விதிக்கப்படும் அதையும் செலுத்த வேண்டும் என்றனர். இது கடன் பெற்றவர்களுக்கும், நேர்மையான வாடிக்கையாளர்களுக்கும் இரட்டைச் சுமை. நாங்கள் வட்டிக்கு வட்டி கட்ட வேண்டுமா?

வங்கிகளுக்கு ஏராளமான சலுகை அளிக்கிறார்கள். ஆனால், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சலுகையும் இல்லை. என்னுடைய மனுதாரர் இதுவரை எந்தக் கடனையும் செலுத்தாமல் இல்லை. அவ்வாறு இருக்கும்போது, கால அவகாசம் பெற்றதற்காக வட்டிக்கு வட்டி செலுத்தக் கூறி தண்டிப்பதா?

ரிசர்வ் வங்கி என்பது ஒழுங்கு முறை அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால், வங்கிகளின் ஏஜெண்ட் போல் செயல்படக்கூடாது. கரோனா காலத்தில் கடன் பெற்றவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இப்போது அரசு கடன்களை மறுசீரமைப்பு செய்கிறோம் என்று கூறுகிறது. கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிக்கும், அரசுக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், கடன்பெற்ற நேர்மையான வாடிக்கையாளர்களைத் தண்டிக்காதீர்கள்''.

இவ்வாறு தத்தா வாதிட்டார்.

ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான கிரிடாய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தர்ராம் வாதிடுகையில், “கடன் தவணை செலுத்தும் காலத்தை கூடுதலாக 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி செய்யப்படாவிட்டால், அதன் வட்டி வீதத்தையாவது குறையுங்கள்.

தொழில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு கடந்த மாதம் 6-ம் தேதி ரிசர்வ் வங்கி அளித்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT