தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கை தள்ளுபடி செய்து அவரை உடனடியாக விடுதலை செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த கஃபீல் கான், ‘நான் வளைந்து கொடுப்பவனல்ல’ என்றார்.
சிறையிலிருந்து விடுதலையானவுடன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் பேசும்போது, என்னை உ.பி. அரசு குறிவைத்து இலக்காக்கியது, என்னை நிரந்தரமாக சிறையில் வைக்கத் திட்டமிட்டது. ஏனெனில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் பல இறந்ததையடுத்து கேள்விகள் எழுப்பினேன். ஆக்சிஜன் துயரத்தில் 70 குழந்தைகள் பலியானதற்கு எதிராக குரல் எழுப்பினேன்.
டாக்டர் கஃபீல் கான் கொலைகாரர் இல்லை என்றால் அப்போது யார் கொலை செய்தது? என்று கேள்வி எழுப்புகிறேன் என்றார்.
குடும்பத்துடன் ராஜஸ்தான் செல்கிறார் டாக்டர் கஃபீல் கான். உத்தரப் பிரதேசத்தில் தனக்கு பாதுகாப்பில்லை என்கிறார் டாக்டர் கஃபீல் கான்.
“மும்பையில் என்னைக் கைது செய்த போது, என்னை என்கவுண்டரில் காலி செய்து விடுவார்கள் என்று கூறினேன். அதனால்தான் உத்தரப் பிரதேசத்துக்கு வெளியே சிலகாலம் செலவிட முடிவெடுத்தோம்” என்றார்.
டாக்டர் கான் தாயார் மேற்கொண்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் கோவிந்த் மாத்துர், நீதிபதி சவ்மித்ர தயால் சிங் ஆகியோர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இவர் மீது பிரயோகித்தது சட்ட விரோதம் என்று கூறி உடனடியாக வரை விடுவிக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவிட்டனர்.
சிஏஏவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பாய்ந்த்து, ஆனால் கஃபீல் கான் கூறுவது என்னவெனில், “டிசம்பர் 12, 2019-ல் நான் சிஏஏ குறித்து உரையாற்றும்போது என்னைக் கைது செய்யவில்லை. கோரக்பூர் ஆக்சிஜன் பற்றாக்குறை, 70 குழந்தைகள் இறப்பு தொடர்பான 2வது விசாரணையிலும் என்னை கோர்ட் விடுவித்தது. இதனால் என்னை எப்படியாவது குற்றச்சாட்டில் இழுத்து விட்டு சிறையில் தள்ள வேண்டுமென்று உ.பி. அரசு திட்டமிட்டு செய்து முடித்தது.
வன்முறையைத் தூண்டும் விதமாக இவர் பேசினார் என்ற உ.பி.அரசின் வாதத்தை கோர்ட் தவிடுபொடியாக்கியது. அவரது உரை மாறாக தேச ஒற்றுமையை பாதுகாப்பதற்காகவும் வன்முறை கூடாது என்றும் கூறியதாக கோர்ட் தெரிவித்தது.
டாக்டர் கஃபீல் கான் அஸாம், கேரளா, பிஹார் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று இலவச மருத்துவச் சேவையில் ஈடுபடுபவர் ஆவார். கோவிட்-19 ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவர் முன் வந்தார்.
இந்நிலையில் கோவிட்-19 குறித்து கபீல் கான் கூறும்போது, “உ.பி.யில் சுகாதா அமைப்பு உடைந்து போயுள்ளது. நான் ஆரோக்கியம் குறித்து பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் என் வாயை அடைக்க அவர்கள் திட்டமிட்டனர். என்னை 2022 வரை சிறையில் வைத்திருக்க திட்டமிட்டதாக நம்புகிறேன்” என்றார் டாக்டர் கஃபீல் கான்.