பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

பண மதிப்பிழப்பில் இருந்துதான் தேசத்தின் பொருளாதாரம் அழியத் தொடங்கியது: மத்திய அரசு மீது ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம்

பிடிஐ

பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்துதான் தேசத்தின் பொருளாதாரம் அழியத் தொடங்கியது. ஒன்றன்பின் ஒன்றாக தவறான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) பொருளாதார அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இதுவரை இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நிதியாண்டின் (2019-20) முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.2 சதவீதம் வளர்ச்சி இருந்த நிலையில், கடந்த ஜனவரி –மார்ச் மாதத்தில் 3.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதமாகக் குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்துதான் காலாண்டு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்போது இருந்து ஏறக்குறைய 24 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான வீழ்ச்சியைக் கண்டதில்லை என்றும், இது எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சி எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியபின் மத்திய அரசை எச்சரித்த ராகுல் காந்தி, கரோனாவைக் காட்டிலும் மோசமான பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மத்திய அரசு தயாராக வேண்டும் என்று எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில், “ நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 23.9 சதவீதம். தேசத்தின் பொருளாதாரத்தை அழிப்பது பண மதிப்பிழப்பிலிருந்து தொடங்கியது. அப்போது இருந்து, மத்திய அரசு தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தவறான கொள்கைகளையே அறிமுகப்படுத்தியது” எனச் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பொருளாதார சுனாமி வரப்போகிறது என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.

ஆனால், மத்திய அரசு வெற்றுத் தோற்றத்துக்காக மட்டும் நிதியுதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இப்போது பொருளாதாரத்தின் நிலையைப் பாருங்கள். பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுதான் காரணம்” என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மோடிஜி, உங்களின் ராஜதந்திர நடவடிக்கைகள் எல்லாம், உண்மையில், பேரழிவு தரும் நடவடிக்கைகள் எனக் குறைந்தபட்சம் இப்போதாவது ஏற்றுக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, லாக்டவுன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT