மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன், முழு அரசு மரியாதையுடன் டெல்லி லோதா எரியூட்டு மையத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக, கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இருப்பினும், பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார்.
கடந்த 21நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார். பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று அதிகாலை டெல்லி ராஜாஜி மார்க் சாலையில் இருக்கும் அவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இன்று காலை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், திமுக சார்பில் டிஆர் பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரணாப் முகர்ஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகலில் பிரணாப் முகர்ஜியின் உடலை பிபிஇ கிட் அணிந்த ராணுவ வீரர்கள் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றினர். வழக்கமாக குடியரசு முன்னாள் தலைவர் உயிரிழந்தால், ராணுவ கவச வாகனத்தில் ஏற்றித்தான் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.
ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், மத்திய சுகதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி, அதற்குரிய வாகனத்தில் ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும், சமூக விலகலைக் கடைப்பிடித்தும் பிரணாப் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
டெல்லி லோதி சாலையில் உள்ள மின் எரியூட்டு மையத்தில் தேசியக் கொடி போர்த்தப்பட்ட பிரணாப்பின் உடல் வைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு அவரின் மகன் அபிஜித் முகர்ஜி இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை அளித்து தேசியக் கொடியை பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது.