டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், மாநில சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்தார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சந்திப்பின்போது, கட்சிக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுமாறு பொதுச் செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பீகார், ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கும் ஆயத்தமாகுமாறு கட்சிப் பொதுச்செயலாளர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பொதுச்செயலாளர் ராம் லால், அமித் ஷா, ஆனந்த் குமார், தர்மேந்திர பிரதான், வருண் காந்தி, ராஜீவ் பிரதாப் ரூடி, தாவர்சந்த் கெலாட், ஜெ.பி.நட்டா, தாபிர் கோவா, முரளிதர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளை மாலை, டெல்லி அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மேலும் பல பாஜக நிர்வாகிகளை சந்திக்கவுள்ள மோடி, தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது.