குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.
இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி காலமானார்.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதுடெல்லி ராணுவ ஆராய்ச்சி, பரிந்துரை மருத்துவமனையில் 2020 ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் 31.08.2020 முதல் 06.09.2020 முடிய, ஏழு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். இந்த துக்க காலத்தில், இந்தியா முழுவதும் தேசியக் கொடி, அரசுக் கட்டிடங்களில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்த நாட்களில் எந்த அரசு விழாக்களும் நடைபெறாது.
இறுதி அரசு மரியாதை நடைபெறும் தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.