குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம் 
இந்தியா

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

பிடிஐ

குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிசிச்ைச பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி(வயது86) மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

பிரணாப் முகர்ஜியின் மூளையில் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டபின்பு அவர் கோமா நிலையில் இருந்து வந்தார். நாளடைவில் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது

இதனிடையே, அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதுடன் அவரது சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிகிச்சைப் பலன் அளிக்காமல் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார் என்று அவரின் மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ மிகுந்த கனத்த இதயத்துடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

என்னுடைய தந்தை பிரணாப் முகர்ஜி சிறிதுநேரத்துக்கு முன் காலமானார். ஆர்ஆர் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமான சிகிச்சை அளித்தும், நாடுமுழுவதும் மக்களின் பிரார்த்தனைகள், துவாக்கள், வேண்டுதல்கள் இருந்தும் அவர் காலமானார். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், திட்டக்குழு துணைத் தலைவராகவும் பிரணாப் முகர்ஜி இருந்துள்ளார்.

2008-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி பிரணாப் முகர்ஜியை கவுரப்படுத்தியது.

இதுதவிர சர்வதேச அளவில் 14 பல்கலைக்கழகங்கள் மூலம் கவுரவ டாக்டர் பட்டமும், வங்கதேசம், ஐவரிகோஸ்ட், சைப்ரஸ் நாடுகள் மூலம் கவுரவ விருதுகளும் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT