இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 761 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிர்தது 761 பேர் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 35 லட்சத்து 42 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் உலகளவில் புதிய மைல்கல்லையும் இந்தியா இன்று படைத்துள்ளது. இதுவரை ஒரேநாளில் அதிகபட்ச பாதிப்பை இதுவரை அமெரிக்கா மட்டுமே வைத்திருந்து.
கடந்த ஜூலை 17-ம் தேதி, அமெரிக்காவில் அதிகபட்சமாக 77 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதுதான் ஒரேநாளில் அதிகபட்ச பாதிப்பாக உலகளவில் இருந்தது. அதை இந்தியா இன்று முறியடித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், 10 லட்சத்தை 59 நாட்களில் எட்டியது. 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் பாதிப்பை 21 நாட்களிலும், 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் பாதிப்பை 16 நாட்களிலும் எட்டியுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23 நாட்களில் 15 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு ஒருபக்கம் மோசமாக இருந்தாலும், ஆறுதல் அளிக்கும் வகையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 13 ஆயிரத்து 933 ஆக உயர்ந்து, 76.61 சதவீதம் பேர் மீண்டுள்ளனர்.
கரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 65 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 21.60 சதவீதம் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 948 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 63 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 328 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 115 பேர், தமிழகத்தில் 87 பேர், ஆந்திராவில் 82 பேர்,உத்தரப்பிரதேசத்தில் 62 பேர், மேற்கு வங்கத்தில் 53 பேர், பஞ்சாபில் 41 பேர், உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேசத்தில் 22 பேர், ஜார்க்கண்டில் 16 பேர், டெல்லியில் 15 பேர், ஒடிசாவில் 14 பேர், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 13 பேர், புதுச்சேரியில் 12 பேர், சத்தீஸ்கர், உத்தரகாண்டில் தலா 11 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் 10 பேர், ஹரியானாவில் 9 பேர், ஜம்மு காஷ்மீரில் 7 பேர், கேரளாவில் 6 பேர், லடாக், திரிபுராவில் 4 பேர், அசாம், கோவா, பிஹாரில் தலா 3 பேர், அந்தமான் நிகோபர் தீவுகளில் 2 பேர், இமாச்சலப்பிரதேசம், மணிப்பூரில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 4 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரத்து 636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு்ள்ளன. இதில் நேற்று மட்டும் 10 லட்ச்து 55 ஆயிரத்து 27 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 328 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 103ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 85ஆயிரத்து 467பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 87 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 52 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 14 ஆயிரத்து 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,404ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 15 ஆயிரத்து 109 பேர் சிகிச்சையில் உள்ளனர். 13 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,989 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 86,465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 115 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 5,483 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 23,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் 97 ஆயிரத்து 681 பேர் சிகிச்சையில் உள்ளனர். 82 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,796 ஆக அதிரித்துள்ளது.
தெலங்கானாவில் 31 ஆயிரத்து 284 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 10 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 818 ஆக அதிகரித்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது