ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே நேற்று இரவு போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகரின் பதான்சவுக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று மாலை போலீஸார், சிஆர்பிஎப் படையினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் வருவதை அறிந்து அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீஸாரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில் நேற்று இரவு ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இன்று அதிகாலை மீண்டும் இருதரப்புக்கும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோதலில், காஷ்மீர் போலீஸ் துணை ஆய்வாளர் பாபு ராம் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீநகர் பாபுசவுக் பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் காஷ்மீரில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 150 தீவிரவாதிகள் பாதுகாப்புபடையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு நாட்களுக்கு முன் ஷோபியான் மாவட்டம் கிலூரா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் ஒருவர் சரணடைந்தார்.
மோதலில் கொல்லப்பட்ட தீவிராவதிகள் 4 பேரில் ஒருவர், அல் பதார் தீவிரவாத அமைப்பின் மாவட்டத் தலைவர் சகூர் பரே, மற்றொரு தீவிரவாதி சுகைல் பாட் என்பது குறிப்பிடத்தகக்து. சமீபத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த விவகாரத்தில் இருவரும் தேடப்பட்டவர்கள் என போலீஸார் ெதரிவித்தினர்.