நீதித்துறையையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் விமர்சித்தமைக்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் நாளை(திங்கள்கிழமை) அறிவிக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பிஆர் கவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. பிரசாந்த் பூஷனுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வரும் செப்டம்பர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி அறிவித்தது.
பிராசந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசத்தை நீதிபதிகள் அளித்திருந்தனர் ஆனால், 24-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் இந் வழக்கு வந்த போது, மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிரசாத் பூஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, “ மன்னிப்புக் கேட்பதால் என்ன தவறு இருந்துவிடப் போகிறது. மன்னிப்புக் கோருவது பாவகாரியமா. அல்லது குற்றம் செய்ததை வெளிக்காட்டுமா.
மன்னிப்பு என்பது மாய வார்த்தை, அது காயத்தை குணப்படுத்தும். மன்னிப்புக் கோரினால் அனைவரும் மகாத்மா காந்தி நிலைக்கு ஒப்பாவீர்கள்” எனத் தெரிவி்த்தார்.
மேலும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூறுகையில், “ பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிடக்கூாடது. இரக்கத்தையும், கருணையையும் வெளிப்படுத்த நீதிமன்றதுக்கு இது உகந்த நேரம்” எனத் தெரிவித்தார்.
பிரசாந்த் பூஷன் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறுகையில் “தண்டனை வழங்குவதன் மூலம் தனது மனுதாரரை ‘தியாகியாக’ மாற்ற வேண்டாம் என்று நீதிமன்றத்திடம் கோருகிறேன். இப்போது தேவைப்படுவது நீதித்துறை அரசியலமைப்புத்தான் தவிர கருணை அல்ல “ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை விவரங்களை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.