ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி கூட்டத்தில் பங்கேற்றதற்காக பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜை கட்டாயமாக போலஸீார் தனிமைப்படுத்தி ஆசிரமத்துக்கு கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாக்ஷி மகராஜ்ஜை உடனடியாக விடுவிக்க வேண்டும் இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்படும், விதிமுறைகளை அமல்படுத்துவதில் இரட்டைநிலைப்பாடு கூடாது என்று பாஜக சார்பில் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச உன்னவ் தொகுதி பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கிரித் நகரில் ஒரு நிகழ்ச்சிகி்காக தான்பந்த் நகர் வழியாக வந்தார்.
நிகழ்சியை முடித்துவிட்டு தான்பந்த் நகரிலிருந்து டெல்லி செல்ல சாலை மார்க்கமாக நேற்று மகராஜ் சென்றார். அப்போது, பிர்தாந்த் நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தான்பந்த்மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மகராஜின் காரை மறித்தனர்.
அவரிடம், கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறி சாந்தி பவன் ஆஸிரமத்துக்கு மகராஜை அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக சாக்ஷி மகாராஜ் போலஸாருடனும், மாவட்ட அதிகாரிகள், தலைமைச் செயலாளருடனும் கடுமையாக வாதிட்டார். ஆனால், எந்த பயனும் இல்லாததால், கட்டாயமாக தனிமைப்படுத்த அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் ராகுல் குமார் சின்ஹா கூறுகையில் “ கரோனா விதிமுறைகளை மீறியதால், எம்.பி. சாக்ஷி மகராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வேறு மாநிலங்களில் இருந்து வருவோர் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்துக்குள் வருவது குறித்து முன்கூட்டியே மகராஜ் நிர்வாகத்துக்கு தெரிவிக்கவில்லை. தேவையென்றால், அவர் விலக்கு கோரி விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், தன்னை 14 நாட்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திய ஜார்க்கண்ட் அரசை சாக்ஷி மகராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில் “ என்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தியுள்ளார்கள். நான் ஒரு எம்.பி. ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி, என்னுடைய உடல்நலமில்லா தாயை நான் சந்திக்க கூடாதா.
அதுமட்டுமல்லாமல் ஞாயிறன்று நடக்கும் நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற வேண்டிய நிலையில் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தியுள்ளார்கள். இது அருவருப்பாக இருக்கிறது. 14 நாட்கள் தனிமை என்று சொல்லியிருந்தால் நான் வந்திருக்கமாட்டேன்” எனத் தெரிவித்தார்
சாக்ஷி மகராஜ் தனிமைப்படுத்தப்பட்டதை கடுமையாகக் கண்டித்துள்ள மாநில பாஜக அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மாநில பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் கூறுகையில் “ முதல்வர் ஹேமந்த்சோரன் கரோனா விதிமுறைகளை இரட்டை நிலைப்பாட்டுடன் அமல்படுத்துகிறார்.
விஐபிக்கள், சமானிய மனிதர்கள், ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அனைவர் மீது நடவடிக்கை எடுப்பதில் வேறுபாடு இருக்கிறது. மகராஜை விடுவிக்காவிட்டால் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
பாஜக தலைவர் பாபுலால் மாரண்டி டெல்லியிலிருந்து ராஞ்சி வந்தமைக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியிலிருந்துராஞ்சி வந்தபோது அவர்களை தனிமைப்படுத்தவில்லை.
உத்தரப்பிரதேச ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜ் பிரதாப் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து செல்கிறார் அவரை தனிமைப்படுத்தவில்லை.” எனத் தெரிவித்தார்.