இந்தியா

வாரணாசியில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் கட்டத் திட்டம்: கரோனா பாதிப்பு குறைந்தபின் பணிகள் தொடக்கம்

பிடிஐ

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலைப் போன்று, புதிதாக கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு முடிந்தபின் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியாகும். இங்கு திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலின் மாதிரித் தோற்றத்தில் பல கோடி மதிப்பில் புதிதாக கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறுகையில், “ திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலின் மாதிரி தோற்றத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் கோயில் கட்ட உள்ளோம்.

ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர், மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் திருப்பதி கோயில் தோற்றத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் இப்போது வாரணாசியிலும் பல கோடி மதிப்பில் கோயில் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு இருப்பதால் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. தொற்று பாதிப்பு குறைந்தவுடன் கோடிக்கணக்கிலான மதிப்பில் கோயில் பணிகள் தொடங்கப்படும்.

வழக்கமாக இந்து காலண்டர் அடிப்படையில் ஓராண்டுக்கு 12 மாதங்கள்தான் வரும். ஆனால், இந்த ஆண்டு 13 மாதங்கள் வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று இந்து சூரிய காலண்டர் அடிப்படையில் வரும். அதன்படி, இரு பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இவை அனைத்தும் இந்த ஆண்டில் நடக்க உள்ளது.

முதல் பிரமோற்சவம் செப்டம்பர் மாதத்திலும், அடுத்த பிரமோற்சவம் அக்டோபர் மாதத்திலும் நடக்கும். இதில் முதல் பிரமோற்சவத்தில் பக்தர்கள் ஒருவருக்கும் அனுமதியில்லை. ஆனால், 2-வது பிரமோற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT