மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததற்கு காரணம் என்ன?: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி பதிலடி

பிடிஐ


நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததற்கு கடவுளின் செயலான கரோனா வைரஸ்தான் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

41-வது ஜிஎஸ்டி கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.

அப்போது, நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்தவட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

இதில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கரோனாவால் பாதிக்கப்பட்டது. அந்த கரோனா கடவுளின் செயல் என்று நிர்மலா சீதாராமன் பேசியதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டின் பொருளாதாரம் 3 செயல்களால் அழிக்கப்பட்டது. முதலாவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டது. இரண்டாவதாக தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கையால் பொருளாதாரம் அழிக்கப்பட்டது.

மூன்றாவதாக கரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாகக் பயன்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டின் பொருளதார வளர்ச்சி மோசமாகி வருவது குறித்து மத்திய அரசு பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டுவருவது குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கரோனா வைரஸ் வளைகோடு குறித்த வரைபடங்களைக் கூட கடந்த இரு மாதங்களுக்கு முன் ராகுல் காந்தி தனது ட்வி்ட்டரில் வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

அதில், “ கரோனா வளைகோட்டை சாய்ப்பதற்கு பதிலாக, லாக்டவுனில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வளைகோட்டை மத்திய அரசு சாய்த்துவிட்டது” என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT