ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா காந்தி இடைக் கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று கடந்த 10-ந் தேதியுடன் ஓராண்டு ஆகிறது.
சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரசுக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள்.
இதில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் கூறும் நிலையில் இல்லை. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில், கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
நாக்பூர் முதல் சிம்லா வரை கட்சிக்கு 16 எம்.பிக்கள் உள்ளனர், அதில் எட்டு இடங்கள் பஞ்சாபிலிருந்து வந்தவை. நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். கூட்டம் நடந்தால் நான் என் பார்வைகளை முன் வைப்பேன்.
பிரச்சினை தனிநபர்களுக்கிடையிலானது அல்ல, இது நாடு எதிர்கொண்டிருக்கும், கட்சி எதிர்கொண்டு வரும் விவகாரங்கள் பற்றியது. சிறந்த அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையில் மாற்றுப் பிரச்சார கதையாடலகளை உருவாக்க உதவுவது காங்கிரசுக்கு உதவும்.
கடித எழுதியவர்களில் பெரும்பாலோர் நீண்ட காலமாக அரசியலில் இருப்பதால், அவர்கள் கட்சிக்கு உறுதியுடன் இருப்பதாகவும், சோனியா காந்தி மீது மிக உயர்ந்த மரியாதை இருப்பதாகவும் கூறுகிறார்கள். எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் இருந்து கட்சி மீண்டுவரவும் பாஜகவை வெற்றிபெறவும் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தலைவர் சோனியா காந்தி, நியாயமான எண்ணம் கொண்டவர், தனது வார்த்தையை கடைப்பிடிப்பார், நிச்சயமாக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்” என்று கூறினார்.