பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்த்தரப்பு வாதங்களை முன்வைக்க திங்கள் கிழமையன்று கடைசி தினம் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று விசாரணைக்கு வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்த்தரப்பு வாதங்களை சமர்ப்பிக்க மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் அடுத்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். ஏற்கெனவே எதிர்த்தரப்பு வாதங்களை சமர்ப்பிக்க இருமுறை அவகாசம் வழங்கப்பட்டு விட்டது.
இன்னொரு முறை திங்கட்கிழமையன்று எதிர்த்தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாகச் சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கிறோம்’என்று கூறினர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் 2001ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விடுவித்ததை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து 2 ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டுமென 2017-ல் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் செப்.30க்குள் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந்நிலையில்தான் எதிர்த்தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய நாளை மறுதினம் என்று இறுதி அவகாசம் வழங்கியது நீதிமன்றம்.