இந்தியா

அந்தமானில் பழங்குடியினர் 9 பேருக்கு கரோனா: போர்ட்பிளேர் மருத்துவமனையில் சிகிச்சை

செய்திப்பிரிவு

அந்தமானில் அருகிவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்தமானில் ‘கிரேட் அந்தமான் மக்கள்’ என்று சொல்லப்படும் பழங்குடியினர் தற்போது 59 பேர் மட்டுமே உள்ளனர். தொலைதூர ஸ்ட்ரைட் தீவில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டவர்கள் ஆவர். இவர்களில் சிலர் போர்ட்பிளேரில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.

அந்தமானில் பழங்குடியினர் வசிக்கும் தீவுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு சமூக சுகாதார அதிகாரி ஒருவர் ஸ்ட்ரைட் தீவுக்குச் சென்றார். கிரேட் அந்தமான் பழங்குடியினர் மட்டுமின்றி ஜாரவா, ஷோம்பென், ஓங்கே உள்ளிட்ட பிற பழங்குடியினரை உன்னிப்பாக கண்காணிக்கவும் இப்பயணம் மேற்கொண்டார்.

இதுதொடர்பாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான சுகாதாரத் துறை இணைச் செயலாளரும் கரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியுமான டாக்டர் அவிஜித் ராய் கூறும்போது, “ஸ்ட்ரைட் தீவில் வசிக்கும் 34 பேர், போர்ட்பிளேரில் வசிக்கும் 24 பேர் என கிரேட் அந்தமான் பழங்குடியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் போர்ட்பிளேரில் வசிக்கும் 5 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ட்ரைட் தீவில் நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேகமாக குணமடைந்து வருகின்றனர். மற்ற பழங்குடியினர் போல அல்லாமல் கிரேட் அந்தமானியர்கள் அடிக்கடி போர்ட் பிளேர் வந்து செல்லக் கூடியவர்கள். அவர்கள் இங்கு தங்குவதற்கு தனி வீடு கட்டித் தரப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT