நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன், கரோனா பரிசோதனை செய்திருத்தல் அவசியம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் கூட்டத் தொடர் தொடங்கும் முன் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷான், ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, டிஆர்டிஓ, டெல்லி அரசு உயரதிகாரிகள் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால், எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும், மக்களவை, மாநிலங்களவைச் செயலாளருடனும் ஓம் பிர்லா தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களிடம் கூறுகையில், “மக்களவை, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் அமரும் இருக்கை, மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்திச் செல்லத் தேவையான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்தொடரை எந்தவிதமான சலசலப்பும், இடையூறுமின்றி நடத்திச் செல்ல முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டத்தொடருக்கு வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்தொடரிலும் சமூக விலகலைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
எம்.பி.க்கள் மட்டுமல்ல கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சரவை அதிகாரிகள், ஊடகத்தினர், மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள், பணியாளர்கள், செயலாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்தபின் தொற்று இல்லாத நிலையில்தான் பங்கேற்க வேண்டும்.
கூட்டத்தொடரில் யாரையும் தொடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் யாருக்கேனும் ஒரு எம்.பி.க்கு ரேண்டமாக பரிசோதனை நடத்தப்படலாம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மழைக்காலக் கூட்டத்தொடர் இரு ஷிப்ட்களாக நடத்தப்பட உள்ளதாகவும், காலையில் ஒருஷிப்ட் மற்றும் மாலையில் ஒரு ஷிப்ட் என நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.