காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப் படம். 
இந்தியா

மாணவர்களின் குரலைக் கேளுங்கள்: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சோனியா காந்தி அறிவுரை

பிடிஐ

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தும் விவகாரத்தில் மாணவர்களின் குரலைக் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் விருப்பத்தின்படி செயல்படுங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தேர்வுகளை நடத்த மத்திய அரசு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் குறையாத நிலையில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைத் தள்ளிப்போடுங்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பாஜக ஆளாத மாநிலங்களின் 6 அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாநில, மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன், நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாணவர்களுக்கும், மத்திய அரசுக்கும் செய்தி விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

''மாணவர்களே! உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், நீங்கள் மிகவும் கடினமான சூழலைச் சந்தித்து வருகிறீர்கள். இது உங்கள் தேர்வு பற்றிய பிரச்சினை, எப்போது எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள்தான் எங்கள் எதிர்காலம். சிறந்த இந்தியாவைக் கட்டமைக்க நாங்கள் உங்களைச் சார்ந்தே இருக்கிறோம்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றி எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது உங்களின் ஒத்துழைப்போடு எடுக்கப்பட வேண்டியது முக்கியமானது.

உங்களையும் உங்கள் விருப்பத்தையும், உங்கள் குரலை மத்திய அரசு கவனிக்கும் என நம்புகிறேன். இதுதான் மத்திய அரசுக்கு எனது அறிவுரை''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT