காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

'மாணவர்களின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுங்கள்': நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

பிடிஐ

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்களின் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கோரி்க்கை விடுத்துள்ளார்.

கரோனா காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம் என்றும், மாணவர்களின் எதிர்காலம் வீணாகக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் (யுஜி) நுழைவுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது.

ஆனால், கரோனா பரவல், மழை வெள்ளம் இருக்கும் நேரத்தில் தேர்வுகளை நடத்தக்கூடாது எனக் கோரி காங்கிரஸ் கட்சியும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

அகமதாபாத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்ட காட்சி: படம் | ஏஎன்ஐ

இந்நிலையில், கரோனா காலத்தில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக உங்கள் குரலை ஒருமுகப்படுத்துங்கள். மாணவர்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுங்கள்.

மாணவர்கள் மீது அரசு கவனத்தைத் திருப்ப வைப்போம். கவலையடைந்துள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோரி வீடியோவையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ ஒரு முடிவை மத்திய அரசு எடுக்கும்போது, அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நியாயமாக எடுக்க வேண்டும்.

இப்போது ஜேஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகளை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி பாஜக அரசை கேட்டுக்கொள்கிறோம். மாணவர்களின் கவலையைப் புரிந்துகொண்டு, முடிவு எடுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங். தொண்டர்கள் போராட்டம் நடத்திய காட்சி: படம் | ஏஎன்ஐ

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கரோனா காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராகப் பேசியுள்ள வீடியோவைும் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் இணைத்துள்ளது.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை கரோனா காலத்தில் நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாட்டின் அனைத்து மாநில, மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT