நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுவரை 40.35 மக்கள் ஜன் தன் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜன் தன் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி அந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஜன் தன் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கையில் அடிக்கல்லாக பிரதமர் ஜன் தன் திட்டம் இருக்கிறது. நேரடி பணப்பரிமாற்றம், கரோனா காலத்தில் நிதியுதவி அளிப்பது, பிரமதர் கிசான் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் வழங்குதல், ஆயுள் காப்பீடு திட்டம் என அனைத்துக்கும் முதல் படி அனைத்து வயது வந்தோருக்கும் வங்கிக் கணக்கை உருவாக்கிக் கொடுத்தாலாகும்.
அதை பிரதமர் ஜன் தன் திட்டம் நிறைவு செய்யும் தறுவாயில் இருக்கிறது. நிதி உள்ளடக்கம் என்பது அரசாங்கத்தின் தேசிய முன்னுரிமையாகும். ஏனெனில் இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது
ஏழைகள் தங்களின் சேமிப்புகளை முறைப்படியான நிதிமுறைக்குள் கொண்டுவருவதற்கு ஜன் தன் திட்டம் உதவுகிறது. தங்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான பணத்தை அனுப்புவதற்கும், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களின் படியிலிருந்து வெளியே வரவும் இந்தத் திட்டம் உதவுகிறது”.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட அறிக்கை:
“பிரதமர் மோடியின் தலைமையில், ஜன் தன் திட்டம் வங்கிக் கணக்கு இல்லாதவர்களை வங்கி முறைக்குள் கொண்டு வந்து, இந்தியாவின் நிதிக் கட்டமைப்பை விரிவுபடுத்தியது.
40 கோடி மக்களையும் வங்கிக் கணக்கு உள்ளவர்களாக மாற்றியது. இதில் பெரும்பாலான பயனாளிகள் பெண்கள்தான், பெரும்பாலும் கிராமங்களில் உள்ள மக்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில், பயனாளிகளுக்கு விரைவாகப் பணம் சென்று சேரவும், சமூகத்தில் கடைநிலையில் உள்ள மக்களுக்கு நிதிப்பாதுகாப்பு அளிக்கவும் ஜன் தன் திட்டம் உதவியது. பிரதமர் ஜன் தன் திட்டம் மூலம் நேரடி பணப் பரிவர்த்தனையால் ஒருரூபாய் கூட வீணாகாமல் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைகிறது.
தற்போது பிரதமர் ஜன் தன் திட்டத்தில் ரூ.1.31 லட்சம் கோடி வைப்பு இருக்கிறது. இதில் சராசரியாக ஒரு நபர் ரூ.3,239 டெபாசிட் செய்துள்ளார்.
பிரதமர் ஜன் தன் திட்டத்தில் கூடுதல் வசதிகளைக் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வங்கிக் கணக்கு என்ற நிலையிலிருந்து, ஒவ்வொரு வங்கிக் கணக்கு இல்லாத வயது வந்தோருக்கும் வங்கிக் கணக்கு என மாற்றியது.
இதன்படி ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை, ரூ.2 லட்சத்துக்கான இலவச விபத்துக் காப்பீடு, ரூபே டெபிட் கார்டு வசதி போன்றவை அளிக்கப்பட்டன
மேலும், வங்கியில் இருப்புப் பணத்துக்கும் அதிகமாக ரூ.10 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் (ஓடி) பெறுதல், எந்தவிதமான கட்டுப்பாடுகள் இல்லாமல் ரூ.2 ஆயிரம் வரை பெறுதல் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டன.
கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக 3.60 கோடி மக்கள் ஜன் தன் வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளனர். 2020, ஆகஸ்ட் மாதம் வரையில் 40.35 கோடி ஜன் தன் வங்கிக்கணக்கு உள்ளன. 34.81 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன''.
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.