'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் மூலம் நாட்டின் ஆயுத உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறையில் தன்னி றைவை அடைவது தொடர்பான காணொலி கருத்தரங்கில் அவர் நேற்று பேசியதாவது:
உலகில் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது உள்நாட்டு ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு உள்நாட்டிலேயே ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் மூலம் நாட்டின் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டே 101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 74 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆயுத உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. பாதுகாப்பு துறையில் நாம் தன்னிறைவை எட்டினால், உலகளாவிய அமைதி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும்.
பாதுகாப்பு துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முப்படைகளுக்கும் தலைமை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், உத்தர பிரதேசத்தில் பாதுகாப்புதொழில் வழித்தடம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்படும்.
பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டங்களை விரைவுபடுத்த சிவப்பு நாடா முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 108 வகையான பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்திசெய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.