இந்தியா

மகா. கட்டிட இடிபாடுகளிலிருந்து 19 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட 4 வயது குழந்தை; தாய், சகோதரிகள் இறந்தது தெரியாத நிலையில் அழுகை

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை அருகே உள்ள காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏற்கனவே, 13 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுவன் மொகமது பாங்கி 19 மணி நேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியான தன் தாய் மற்றும் 2 சகோதரிகளை தொடர்ந்து கேட்டபடி அழுது வருவதாக வேதனை தரும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் இந்தச் சிறுவனின் தாய் நவ்ஷின் (32) சகோதரிகள் ஆயிஷா (6), ருகாயா (2) ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.

செவ்வாயன்று கட்டிட இடிபாடுகளிலிருந்து 4 வயது சிருவன் மொகமது பாங்கி மீட்கப்பட்ட நிலையில் இவனின் தாயாரின் சகோதரி மொகமதை அழைத்துச் சென்றார்.

இந்தச் சிறுவன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறும்போது, “இடிபாடுகளுக்கு அடியில் எனக்கு தாகம் எடுத்தது. அல்லா எனக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று வேண்டினேன். எதுவும் தெரியவில்லை அதனால் தூங்கி விட்டேன்” என்றான்.

காப்பாற்றப்பட்டதிலிருந்து மொகமது பாங்கி தன் தாய், சகோதரிகளைக் கேட்டு அழுது வருவதாக இவனது மாமா பஷீர் பர்க்கார் கூறியுள்ளார். ஆனால் தாய், சகோதரிகள் இல்லை, உயிருடன் இல்லை என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. குடும்பத் தலைவர் துபாயில் இருக்கிறார். அவர் வந்தவுடன் சிறுவன் சமாதானம் அடைவான் என்று வேதனையுடன் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT