பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக குற்ற அவமதிப்பு வழக்கு நடைமுறைக்கு தன்னால் ஒப்புதல் வழங்க முடியாது என்று சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் மறுத்ததைத் தொடர்ந்து துஷார் மேத்தாவும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-ன் படி பிரிவு 15ன் கீழ் குற்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு சொலிசிட்டர் ஜெனரல் ஒப்புதல் தேவை.
மும்பை கலெக்டிவ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர் பேசும் போது அயோத்தி தீர்ப்பு குறித்த தன் பார்வையை முன் வைத்தார், அதில், “பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்று கூறும் நம் நாட்டு உச்ச நீதிமன்றம் அதே தீர்ப்பில் இடித்தவர்களுக்குச் சாதகமாகவே தன் தீர்ப்பை பரிசாக அளித்துள்ளது” என்று கூறியது சர்ச்சையாகி நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உருமாறியது.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கரின் பேச்சு உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் இழிவுபடுத்துவதாகவும் கூறி அனுஜ் சக்சேனா குற்ற அவமதிப்பு விசாரணைக்காக என்ற வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் ஒப்புதல் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த கே.கே.வேணுகோபால், ஆகஸ்ட் 21ம் தேதியன்று , “இந்த விவகாரம் கோர்ட்டை அவமதிப்பதாகவோ இழிவுபடுத்துவதாகவோ ஆகாது. அவர் கூறியது உண்மை மற்றும் அவரது கருத்து, ஆகவே ஸ்வரா பாஸ்கர் மீதான அவதூறு குறித்த விசாரணைக்கு நான் ஒப்புதல் அளிக்க மறுக்கிறேன்” என்று தெரிவித்து விட்டார். விஷயம் இதோடு முடியவில்லை.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த உஷா ஷெட்டி மற்றும் அவரது வழக்கறிஞர்கள் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் ஸ்வரா பாஸ்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்ற நடவடிக்கைக்கு ஒப்புதல் வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதற்கு ஒரு பக்க பதில் அளித்த துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இதற்கு ஒப்புதல் மறுத்த பிறகே என்னை அணுகுவது ‘தவறான புரிதல்’ ஆகும். அதாவது ஏற்கெனவே கே.கே.வேணுகோபால் மறுத்த ஒன்றிற்கு தான் ஒப்புதல் அளிப்பேன் என்று எப்படி எதிர்ப்பார்க்கலாம் என்ற ரீதியில் மறுப்பு தெரிவித்து விட்டார்.