இந்தியா

காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கருத்து

செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்புவோரை பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று மத்திய பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுக்கு முழு நேர தலைமை தேவை என்று சோனியா காந்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதினர். அவ்வாறு கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளவர்கள் என்று ராகுல் காந்தி கூறியதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இப்போது, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்றுகுரல் எழுப்பியுள்ளனர். அவர்களையும் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைமை குற்றம் சாட்டுகிறது. தங்கள் குறைகளை தலைமையிடம் சொல்லும் சொந்தக் கட்சியினரையே பாஜகவுடன் உறவு வைத்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இப்படியே போனால் காங்கிரசை யாரும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவர் உமாபாரதி கூறும்போது, ‘‘காங்கிரஸில் நேரு குடும்பத்தின் ஆதிக்கம் முடிந்துவிட்டது. இந்திரா காந்தி குடும்பத்தினரை விட்டு காங்கிரஸார் மகாத்மா காந்தியின் பாதைக்கு திரும்ப வேண்டும். மகாத்மா காந்தியின் கொள்கையில் நம்பிக்கை உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அக்கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT