மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த கட்டிடம். 
இந்தியா

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 15 பேர் படுகாயம்: 70 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்புப் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 70 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்மாவட்டம் மகாட் தாலுகா கஜல்புரா பகுதியில் 5 அடுக்கு மாடிக் கட்டிடம் உள்ளது. இதில் 45 குடும்பத்தினர் வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் அந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 5 மாடிக் கட்டிடத்தில் 3 மாடிகள் மட்டுமே இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் கட்டிடத்தில் வசித்து வந்த ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அருகில் இருந்தோர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்ததும் தேசியபேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார், தீயணைப்புப்படையினர் ஆகியோர் கஜல்புரா பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு டாக்டர்கள் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் விரைந்துள்ளது.

இந்த கட்டிடம் இடிந்து விழுந்தவிபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். லேசான காயம் அடைந்தவர்களுக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் 70 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. 5 மாடிக் கட்டிடமாதலால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகபோலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து அறிந்ததும் ராய்காட் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதித்தி தாத்கரே சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான தற்காலிக இருப்பிட வசதிகளும் அங்கு செய்து தரப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

SCROLL FOR NEXT