பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தராகண்ட் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை உத்தராகண்ட் மாநிலத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள லாப்சா கிராமத்தைச் சேர்ந்த ரேகா தேவி (26) என்ற பெண் மலைச்சரிவில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
இந்தத் தகவல் துணை ராணுவப் படையான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை (ஐடிபிபி) வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக லாப்சா கிராமத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணைக் காப்பாற்றி முதலுதவி செய்தனர். அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதை அறிந்த ஐடிபிபி வீரர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். ஆனால் அந்த கிராமத்தில் வாகனத்தில் செல்ல போதுமான சாலை வசதி இல்லை.
இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணை சிறிய படுக்கையில் வைத்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்து முன்சியாரி பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் அனைவரும் லிலம் பகுதியிலுள்ள 14-வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பெரும் இடர்பாடுகளை கடந்து, அவர்கள் செய்த பயணம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. முதலில் 14 வீரர்களும், அதன் பிறகு மேலும் 6 வீரர்களும் சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த பெண்ணை சுமந்து வந்துள்ளனர். இதற்காக 15 மணி நேரமானது என்று ஐடிபிபி ஐஜி நிலப் கிஷோர் தெரிவித்தார். - பிடிஐ