விபத்தில் சேதமடைந்த இரண்டு இருசக்கர வாகனங்கள். 
இந்தியா

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பிய 4 பேர் மரணம் 

கே.தனபாலன்

முதுகுளத்தூர் அருகே திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்கொடி மகன் வேல்முருகன்(29), ஜெயக்குமார் மகன் முனீஸ்வரன்(29). இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு பேரையூரில் இருந்து கள்ளிக்குளம் சாலை வழியாக நேற்றிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்நேரம் கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் முனியசாமி(45) மற்றும் குமரையா மகன் பழனி(40)) ஆகியோர், பேரையூரில் ஒரு திருமண விழாவிற்குச் சென்று விட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கள்ளிகுளம் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த பேரையூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று 4 பேரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனையடுத்து பேரையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT