மக்கள் வளர்ச்சியை தான் விரும்புகிறார்கள், ஆனால் கேரள முதல்வருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் வளர்ச்சி திட்டங்கள் என்றால் பிடிக்காது என மத்திய அமைச்சரும் கேரளாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான முரளிதரன் விமர்சித்துள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் திருவனந்தபுரம் எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவ்ர கூறுகையில் “ இந்திய விமான நிலைய ஆணையம் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வருமானம் பெறுகிறது.
இதில் டெல்லி விமானநிலையத்தை பராமரிக்கும் ஜிஎம்ஆர் நிறுவனம் வருவாயில் 46 சதவீதத்தை தர விமானநிலைய ஆணையத்துக்கு ஒப்புக்கொண்டு அளிக்கிறது. இதுபோன்ற பெரிய தொகையை அரசு இதற்குமுன் எதிர்பார்த்திருக்காது. இன்று மும்பை, டெல்லி விமானநிலையங்கள் மூலம் ரூ.2500 கோடி கிடைக்கிறது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார் மயமாக்கும்போது, கூடுதலாக வசிதிகள், வர்த்தகப் பெருக்கம் போன்றவை நகரில்உருவாகும். இப்போது போதுமான அளவு விமானவசதிகள் இல்லாமல்தான் இருக்கிறோம். வேலைவாய்ப்பு, வருவாய் அதிகரிப்பு போன்றவை உண்டாகும், மாநில அரசுககு வரிவருவாயும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் மத்திய அமைச்சரும் கேரளாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான முரளிதரன் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
‘‘திருவனந்தபுரம் விமான நிலையத்தை அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சி மூலம் மேம்படுத்தும் திட்டத்தை இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது. இரு கட்சிகளுக்கும் எப்போதுமே வளர்ச்சிக்கு எதிரானவர்கள். மக்கள் வளர்ச்சியை தான் விரும்புகிறார்கள். ஆனால் கேரள முதல்வருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் வளர்ச்சி திட்டங்கள் என்றால் பிடிக்காது.’’ எனக் கூறினார்.