என்னுடைய நண்பனை நான் பெரிதும் இழந்து தவிக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். பாஜகவின் கொள்கைகள், சிந்தனைகளை தனது சிறப்பான பேச்சுகளால் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தவர். அருண் ஜேட்லியின் எளிமையான பழகும் குணம், கனிவான பேச்சு போன்றவை அரசியல் வட்டாரத்தில் கட்சிப் பாகுபாடின்றி நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது.
பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சராகவும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகவும் ஜேட்லி இருந்தார்.
புகழ்பெற்ற வழக்கறிஞர், கிரிக்கெட் நிர்வாகி, அரசியல் தலைவர் எனப் பல்வேறு பரிமாணங்களுடன் அருண் ஜேட்லி விளங்கினார். தீவிரமான உடல்நலக் கோளாறு காரணமாக தனது 66-வது வயதில் அருண் ஜேட்லி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி காலமானார்.
அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்ட கருத்தில், “கடந்த ஆண்டு இதே நாளில், நாம் அருண் ஜேட்லியை இழந்துவிட்டோம். என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன். இந்தியாவுக்காக விடாமுயற்சியுடன், இரவு பகலாக உழைத்தார்.
அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், சட்ட வல்லுநத்துவம், அன்பான ஆளுமையுடன் ஜேட்லி திகழ்ந்தவர். அவரின் நினைவாக நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கூறியதைத்தான் இங்கே பதிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தேசத்தைக் கட்டமைக்க அருண் ஜேட்லி வகுத்த முடிவில்லா பல்வேறு மக்கள் நலக் கொள்கைகள், திட்டங்கள், எப்போதும் நினைவில் கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் அருண் ஜேட்லி நினைவாக அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.