தமது இல்லத்தில் காலை நேர உடற்பயிற்சிகளின் போது மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் அதிகாலை நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்.
அவ்வாறு அவர் நடைப்பயிற்சி செய்யும் போது, அங்கு பராமரிக்கப்படும் மயில்களுக்கு உணவளிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், மயில்களுடன் அவர் நேரம் செலவிடுவதை அங்குள்ள புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்துள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் அடங்கிய ஒரு வீடியோ தொகுப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடி நேற்று பகிர்ந்துள்ளார். சுமார் 1 நிமிடம் 47 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் மயில்களுக்கு மோடி தானியங்கள் வழங்குவது, நடைப்பயிற்சி செல்லும் போது மயில் ஒன்று தோகையை விரித்து அவருடன் செல்வது போன்ற அழகிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவுக்கு கீழே, மயில்களின் அழகை வர்ணித்து இந்தியில் கவிதை ஒன்றையும் மோடி பதிவிட்டுள்ளார்.