கோப்புப்படம் 
இந்தியா

கால தாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு 

பிடிஐ


பணிகள் மந்தம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மத்திய அரசு செயல்படுத்திவரும் 412 உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிக்க ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த, திட்டமிடப்பட்டிருந்த மதிப்பைவிட கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி (19.94 சதவீதம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 1,683 உள்கட்டமைப்புத் திட்டங்களில் 412 திட்டங்களுக்கு கூடுதல் செலவும், 471 திட்டங்களைக் முடிக் கூடுதல் கால அவகாசமும் தேவைப்படுகிறது.

திட்டங்கள், ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.150 கோடி முதல் ரூ.200 மதிப்புள்ளதாகும். உரிய காலக்கெடுவுக்குள், விரைவாகப் பணியை முடித்திருந்தால், நிர்ணயிக்கப்பட்ட செலவுக்குள் முடித்திருக்கலாம்.

ஆனால், இப்போது கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவாகப்போகிறது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டநடைமுறை பிரிவு மத்திய அரசின் அனைத்து உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளையும் கண்காணித்து வருகிறது.

புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில், "தற்போது மத்திய அரசு சார்பில் 1,683 உள்கட்டமைப்புத் திட்டங்கள் நடந்து வருகின்றன. 1,686 உள்கட்டமைப்புத் திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 336.20 கோடியாகும்.

இவற்றில் 412 திட்டங்களை முடிக்க கூடுதலான கால அவகாசம் தேவைப்படுகிறது. கூடுதல் அவகாசத்தால், இந்தத் திட்டங்களை முடிக்கும்போது ரூ.24 லட்சத்து 77 ஆயிரத்து 167.67 கோடியாக செலவு அதிகரிக்கும்.

அதாவது கூடுதலாக ரூ.4,11,831.47 கோடி செலவாகும். நிர்ணயிக்கப்பட்ட செலவைக் காட்டிலும் 19.94 சதவீதம் கூடுதலாகச் செலவாகும்.

கடந்த மார்ச் மாதம் வரை இந்தத் திட்டங்களுக்காக ரூ.11 லட்சத்து 21 ஆயிரத்து 435.29 கோடி செலவிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட திட்ட மதிப்பீட்டில் இந்தத் தொகை 45.34 சதவீதமாகும்.


தாமதமாக நிறைவடைய இருக்கும் 471 உள்கட்டமைப்புத் திட்டங்களில் 127 திட்டங்களை முடிக்க ஒன்று முதல் 12 மாதங்கள் தேவைப்படும், 112 திட்டங்களை முடிக்க 13 முதல் 24 மாதங்களாகும், 127 திட்டங்களை முடிக்க 25 முதல் 60 மாதங்கள் வேண்டும், 105 திட்டங்களை நிறைவு செய்ய 61 மாதங்களும் அதற்கும் மேலும் காலம் தேவைப்படலாம்.

இந்த 471 திட்டங்களும் முடிய சராசரியாக 43.34 மாதங்கள் தேவைப்படும். அதாவது ஏறக்குறைய திட்டங்களை முடிக்க 4 ஆண்டுகளாகும்.

நிலத்தை கையகப்படுத்துதலில் சிக்கல், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல், கட்டமைப்புப் பணிகளைச் செய்வதற்குப் போதுமான ஆதரவும், தொடர்பும் கிடைத்தலில் பிரச்சினை போன்ற காரணங்களால் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவடையாமல் தாமதமாகின்றன எனத் தெரியவருகிறது.

இவை தவிர பொறியியல் பிரிவை விரிவாகக் கட்டமைத்தல், திட்டத்தில் திடீர் மாற்றம் செய்தல், டெண்டர் விடுதலில் தாமதம், பொருட்களைக் கொள்முதல் செய்தலில் தாமதம், சட்டம் ஒழுங்கு சிக்கல், இயற்கைச் சூழல்கள், ஒப்பந்ததாரர்கள் ஒத்துழைக்காமல் போன்ற காரணங்களாலும் திட்டங்கள் தாமதமாகின்றன.

SCROLL FOR NEXT