முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி. 
இந்தியா

உச்ச நீதிமன்றத்துக்கு பிடிக்காத கருத்தை ஒருவர் வைத்திருந்தாலே தண்டனைக்குரியவரா? - முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி பேட்டி

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் ட்வீட்களை தானாகவே முன் வந்து கவனமேற்கொண்டு வழக்குப் பதிவு செய்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் எதிர்வினை கொஞ்சம் அதீதம்தான் என்று இந்திய முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் பூஷண் நீதித்துறை கடந்த 6 ஆண்டுகளாக செயல்படும் விதம் குறித்த இவரது ட்வீட், மற்றும் தலைமை நீதிபதி போப்டே குறித்த இரண்டு ட்வீட்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதில் பிரசாந்த் பூஷண் மன்னிப்புக் கேட்க 2 நாட்கள் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம், ஆனால் அவர், மகாத்மா காந்தியின் கூற்றை கூறி, ‘நான் கருணை எதிர்பார்க்கவில்லை, பெருந்தன்மைக்காக நான் முறையிடவில்லை, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை, காரணம் என்னுடய தொடர்ச்சியான, நிஜமான நம்பிக்கைக்கு நான் மன்னிப்பு கேட்டால் அது எனக்கு நானே நேர்மையற்றவனாக்கிவிடும்’ என்று கூறினார். இந்நிலையில் 24ம் தேதி பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை அளிக்கப்படுமா என்பது பற்றி முடிவாகும்.

இதனையடுத்து முன்னாள் அட்டர்னி ஜெனரலும் ஜூரிஸ்டுமான சோலி சோரப்ஜி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரசாந்த் பூஷண் ட்வீட்களுக்கு நீதிமன்றம் உச்சபட்சமாக அவருக்கு உபதேசம் வேண்டுமானால் செய்யலாம், எச்சரிக்கை விடுக்கலாம் ஆனால் தண்டிக்கக் கூடாது, இந்த மெல்லிய சமச்சீர் நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை, கருத்து இருக்கும், உச்ச நீதிமன்றத்துக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அத்தகைய கருத்துகளை, நம்பிக்கைகளை வைத்திருப்பவர்களை தண்டிக்க முடியுமா?

பூஷண் தன் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்க தயார் என்றால் அவரை அச்சுறுத்தி மவுனத்திற்குள் தள்ளக் கூடாது. அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை, ஆதாரமில்லை என்றால் தண்டிக்கலாம். ஆனால் அவர் சொல்லவே கூடாது, சொன்னாலே தண்டனை என்பதை எப்படி ஏற்க முடியும்.

எந்த ஒரு குடிமகனுக்கும் தனிப்பட்ட பார்வை, கருத்து வைத்திருக்க உரிமை உள்ளது. நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டினால் அவர் தன் குற்றச்சாட்டை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். நான் மீண்டும் கூறுகிறேன் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லை, அடிப்படையில்லை என்றால் தண்டிக்கலாம், ஆனால் அதற்கு முன்னதாகவே கருத்துக்காகவே தண்டிக்கக் கூடாது. அவர்கள் கருதுவது தவறு என்று நீங்களாகவே நினைத்துக் கொள்ள முடியாது, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல வெளிச்சம் தரவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

மேலும் கொஞ்சம் பொறுமை காத்தால்தான் என்ன.. காத்திருந்தால் அனைத்தும் நொறுங்கி விடுமா, வீழ்ந்து விடுமா?

அவதூறு வழக்கு தொடரும் முன் அட்டனி ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டும், அவர்தான் சட்ட அதிகாரி. அவரைப் புறக்கணிக்க முடியாது. கோர்ட் தானாகவே கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அரசியல் சட்டப்பிரிவு 129-ன் படி சில கட்டுப்பாடுகள் உள்ளன. உள்ளார்ந்த அதிகாரம் எதற்காக? இது உள்ளார்ந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதே. கோர்ட் இந்த விஷயத்தை அவசரம் அவசரமாக நடத்துவதும் ஏன்?

இங்கு முக்கியமான விஷயம் கொள்கைதான். உண்மைகளின் அடிப்படையில், அதாவது நிச்சயமான உணமைகளின் அடிப்படையில் நீதித்துறையை விமர்சிக்கலாமா கூடாதா என்பதே. மாறாக நீங்கள் என்ன செய்கிறீர்கள், கோர்ட்டின் அதிகாரத்தை அதிகப்படுத்துகிறீர்கள் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் சோலி சோரப்ஜி.

SCROLL FOR NEXT