திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமம் 50 ஆண்டுகளுக்கு பராமரிக்க மத்திய அரசு ஏலத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் கேரளாவின் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்த்துவரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனியார்மயத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்த்த போதிலும், தனியார்மயத்துக்கு ஆதரவு அளிக்கும் சசி தரூர், “தனியார்மயத்தால், தொழில்கள் விரிவடையவும், முதலீட்டாளர்கள் மாநிலத்துக்குள்வரவும் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர்பக்கத்தில் சசி தரூரை விமர்சித்திருந்தார். அதில், “ சிசி தரூர் ஆங்கிலேயர்களின் பழமையான சொத்துக்குவிப்புக்கு எதிராக இந்தியாவில் சொற்பொழிவாற்றினார், ஆனால் சமகால இந்தியாவில் கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக்குரலாக இருக்கிறார். கொச்சி விமான நிலையத்தை கேரள அரசு சிறப்பாகச் செயல்படுத்தும்போது, திருவனந்தபுரம் விமாநிலையத்தை அதானிக்கு அளித்ததை ஏன் சசி தரூர்ஆதரிக்கிறார்.
அதானி குழுமம் வழங்கும் அதே கட்டணத்தை செலுத்துகிறோம் என கேரள அரசு தெரிவித்தபோதிலும் அதை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
கேரளாவுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் அலுவலகம் உடைத்துவிட்டது. இதுபோன்ற வெட்கக்கேடான தொழிலதிபர்களுக்கு ஆதரவானபோக்கை கேரள மக்கள் ஏற்கமாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் ட்விட்ரில் பதில் அளித்திருந்தார் அதில் “ அன்பு தாமஸ் ஐசக், திருவனந்தபுரம் விமாநிலையத்தில் என்னுடைய நிலைப்பாட்டை விமர்சித்தமைக்கு நன்றி. வருமானம் என்ற ஒரு விஷயத்தை நீங்கள் விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
விமாநிலையத்தின் முழுத்திறன் அளவுக்கு விரிவுபடுத்தும் போது, வர்த்தகத்துக்கு சிறந்த வசதியையும், உள்ளூர், மற்றும் வெளி முதலீட்டாளர்களையும் ஈர்க்க முடியும்” எனத்தெரிவித்திருந்தார்.
மற்றொரு ட்வீட்டில் சசி தரூர் கூறுகையில் “ இந்திய விமான நிலைய ஆணையம் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வருமானம் பெறுகிறது. இதில் டெல்லி விமானநிலையத்தை பராமரிக்கும் ஜிஎம்ஆர் நிறுவனம் வருவாயில் 46 சதவீதத்தை தர விமானநிலைய ஆணையத்துக்கு ஒப்புக்கொண்டு அளிக்கிறது. இதுபோன்ற பெரிய தொகையை அரசு இதற்குமுன் எதிர்பார்த்திருக்காது. இன்று மும்பை, டெல்லி விமானநிலையங்கள் மூலம் ரூ.2500 கோடி கிடைக்கிறது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார் மயமாக்கும்போது, கூடுதலாக வசிதிகள், வர்த்தகப் பெருக்கம் போன்றவை நகரில்உருவாகும். இப்போது போதுமான அளவு விமானவசதிகள் இல்லாமல்தான் இருக்கிறோம். வேலைவாய்ப்பு, வருவாய் அதிகரிப்பு போன்றவை உண்டாகும், மாநில அரசுககு வரிவருவாயும் அதிகரிக்கும்”எனத் தெரிவித்தார்.