இந்தியா

மைனர் மனைவியுடன் உறவு கொள்வது பலாத்காரமாகாதா?- விளக்கம் கோருகிறது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

15 வயது முதல் 18 வயதுடைய மைனர் பெண் தன் மனைவி என்ற காரணத்தால் மட்டுமே ஓர் ஆண் உறவு கொள்வது பலாத்காரம் இல்லையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

'இண்டிபன்டென்ட் தாட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில், "15 வயது முதல் 18 வயது வரை உள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்த நபர் ஒருவர் அப்பெண் தனது மனைவியாகவிட்டதால் உறவு கொள்வது ஏற்புடையதல்ல. மைனர் மனைவியுடன் உறவு கொள்வதும் பலாத்காரமே என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 375-ன் கீழ் ஒரு ஆண் தன் மனைவிக்கு 15-க்கு மேல் ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்வது பலாத்காரமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அரசியல் சட்டப் பிரிவுகள் 14,15, 21 ஆகியனவற்றிற்கு எதிரானதாக உள்ளது. இந்த சட்டத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375, பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள பாக்ஸோ (POCSO) சட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய மகளிர் ஆணையம் இவ்வழக்கில் தேவையான விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

சட்ட முரண்களை கலைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதில் தெளிவான சட்டங்கள் வேண்டும் என்பதே 'இண்டிபன்டென்ட் தாட்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT