புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் : கோப்புப்படம் 
இந்தியா

அசோக் லவாசாவுக்கு  பதிலாக, தேர்தல் ஆணையராக  ஓய்வு பெற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர்  ராஜீவ் குமார் நியமனம் 

பிடிஐ


ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதால், பதவியை ராஜினாமா செய்த அசோக் லவாசின் இடத்துக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் நிதித்துறை செயலாளருமான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை அவரின் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் பதவிக்காலம் வரும் 31-ம் தேதி வரை இருப்பதால், அவர் அந்த பதவியில் தொடரலாம்.

இந்த நிலையில் அசோக் லவாசாவின் இடத்துக்கு முன்னாள் நிதித்துறைச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ராஜீவ் குமார் பதவியில் சேர்வதிலிருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.

கடந்த 1984-ம் ஆண்டு ஜார்கண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக பதவி ஏற்பது இதுதான் முதல்முறையாகும். இந்த பதவியில் 5 ஆண்டுகள்வரை ராஜீவ் குமார் இருப்பார், அதாவது 2025ம் ஆண்டுவரை தொடர்வார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தபின் ராஜீவ் குமார் பதவியில் இருப்பார்.

பொதுவாக தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரையாகும். இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுக்கப்படும். தற்போது ராஜீவ் குமாருக்கு 60 வயதாகிறது.

இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை நேற்று இரவு விடுத்த அறிவிக்கையில் “ அரசியலமைப்புச்சட்டம் 324பிரிவின்படி, தேர்தல் ஆணையர் பதிவியிலிருந்து ராஜினாமா செய்த அசோக் லவாசா பதவிக்காலம் வரும் 31-ம் தேதி முடிந்தபின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இந்த பதவியில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நியமிக்கப்பட்டார், 2023, ஏப்ரல் 28வரை தொடர வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது

கடந்த 2017 செப்டம்ப1 முதல் 2020, பிப்ரவரி 29ம் தேதி வரை மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் செயல்பட்டார்.கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களில் ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.

நிதித்துறையில் ராஜீவ் குமார் இருந்தபோது முக்கிய வங்கிச்சீர்திருத்தங்கள், நிர்வாக நடமுறைகளை அறிமுகம் செய்தார். கடந்த 2017-ம் ஆண்டு நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் பதவி ஏற்றபோது, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின. அதன்பின் வங்கிக்கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்கள் செய்து, 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ராஜீவ்குமார்தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் குமார் இரண்டரை ஆண்டுகளாக இருந்தவரை நிதித்துறை, வங்கி்த்துறையில் பல்ேவறு புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, வங்கிகளுக்கு புதிதாக பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு பொறுப்புள்ளதாக மாற்றப்பட்டது. ஏறக்குறைய ரூ. 3 லட்சம் கோடி வங்கிகளுக்கு மறுமுதலீடு ராஜீவ் குமார் காலத்தில் வங்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT