ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் மாதக்கணக்கில் போராடி வரும் விவகாரத்தில் இன்னும் 2-3 நாட்களில் மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மாற்றப்படும் விதமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரைவு முன்மொழிவை அரசு தயாரித்திருப்பதாக உள் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை முன்னாள் ராணுவ வீரர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
இது குறித்து ஜந்தர் மந்தரில் முன்னாள் மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் கூறும்போது, "2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும் திட்டத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதற்கு மேலான ஆண்டுகளை ஏற்க முடியாத" என்றார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பது நடைமுறை அளவில் சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 1, 2014 முதல் இந்த திருத்தம் கணக்கிலெடுத்துக் கொள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் வலியுறுத்த, மத்திய அரசோ ஜூலை 1, 2014 என்ற தேதியையே எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. கணவனை இழந்தவர்களுக்கு ஓய்வூதிய நிலுவை உடனடியாக அளிக்கப்படுமாறும் மற்றவர்களுக்கு ஓய்வூதிய நிலுவை 4 தவணைகளிலும் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக நீதி ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு விவகாரங்களைக் கண்டறிந்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய பணிக்கப்படும் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிலவரங்களின் படி ராணுவத்தினரின் ஓய்வூதியத் தொகை செலவுகள் ரூ.54,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.