பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ.2.10 லடம் கோடிக்கு புதிய வெளிமுதலீடு அவசியம். அதிலும் குறிப்பாக மத்திய அரசு ஆதரவு மிகவும் முக்கியம் என்று மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனாவில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பல்வேறு தொழில்கள், தொழிற்சாலைகள், சிறு,குறுந்தொழில்கள் முடக்கப்பட்டதால் பொருளதாார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸில் செல்லக்கூடிய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. " கரோனாவால் மீண்டும் முதலீட்டுப் பற்றாக்குறையில் வங்கிகள்" எனும் தலைப்பில் உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் மோசமாக வீழ்ந்து வருகிறது. இது, பொதுத்துறை வங்கிகளின் பங்குகள், பங்குப்பத்திரங்கள் உள்ளிட்டவை கொண்ட சொத்துமதிப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், கடன்களை வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
சில்லரை மற்றும் சிறுவர்த்தக நிறுவனங்களுக்கு அளித்த கடனை வசூலிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வங்கியின் சொத்துமதிப்பு குறையலாம்.
மூடிஸ் நிறுவனத்தின் கணிப்பின்படி, இந்தியாவின் நடப்பு நிதியாண்டு பொருளாதார வளர்ச்சி 2021- மார்ச் முடிவில் மைனஸில் இருக்கும். 2021-ம் நிதியாண்டில்தான் வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.
இந்த வளர்ச்சிக் குறைவால், சில்லரை வர்த்தகம், சிறு, நடுத்த நிறுவனங்கள் துறையிலிருந்து புதிதாக வாராக்கடன் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் ஒருமமுறை கடன் சீரமைப்புத் திட்டம் மூலம் அதாவது கடனை வசூலிப்பதில் சலுகை, கூடுதல் அவகாசம் அளித்தல் போன்றவை மூலம் திடீரென வாராக்கடன் அதிகரிப்பது தடுக்கப்படும்.
ஆனால், வாரக்கடன் மற்றும் மற்றும் கடனை வசூலிப்பதற்கான செலவு அதிகரிக்கும் போது, வங்கியின் முதலீடு மற்றும் லாபம் கணிசமாகக் குறையும்.
வங்கிகள் மீண்டும் மிகப்ெபரிய முதலீட்டுச் சிக்கலைச் சந்திக்கும். ஒட்டுமொத்த முதலீட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடனிலிருந்து 70 சதவீதம் மறுமுதலீடு தேவைப்படும் அதாவது ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும், இரு ஆண்டுகளுக்கு ரூ.2.10 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்.
இதன் அர்த்தம் வங்கிகளுக்கு தொடர்ந்து மத்திய அரசின் ஆதரவு இருத்தல் அவசியம். வங்கிகள் நிதிநிலைத்தன்மையை தொடர்ந்து பராமரித்து வருவதற்கு மத்தியஅரசின் கடன் வழங்கிடவும் வேண்டும்.
அரசின் முதலீட்டு ஆதரவு இல்லாமல் இருந்தால் பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதில் பெரும் பிரச்சினை ஏற்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து மூடிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அல்கா அன்பரசு கூறுகையில் “அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதற்கு ரூ.2.10 லட்சம் கோடி அளவுக்கு வெளிமுதலீடு அவசியம்.
இந்திய வங்கித்துறையில் அரசுத்துறை வங்கிகளே அதிகம் இருப்பதால், ஏதாவது தோல்வி ஏற்பட்டால், ஒட்டுமொத்த நிதிச்சூழலும் பாதிக்கப்படும். ஆதலால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வங்கிகளுக்கு அரசின் ஆதரவுக்கரம் அவசியம்” எனத் தெரிவித்தார்.