இந்தியா

27 ஆண்டுகளாக கர்நாடக‌ சிறையில் வாடிய வீரப்பன் வழக்கில் சிக்கிய பிலவேந்திரன் மரணம்: சொந்த ஊரில் உடல் அடக்கம்

இரா.வினோத்

சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடர்புடைய வழக்கில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடக சிறைகளில் வாடிய பிலவேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை அடுத்துள்ள மார்டள்ளியை சேர்ந்தவர் பிலவேந்திரன்(80). சந்தனக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வீரப்பனின் கூட்டாளி ஆசாரி குருநாதனை கர்நாடக சிறப்பு தேடுதல் படை 1992ம் ஆண்டு கைது செய்தது. அவரிடம் நடத்திய‌ விசாரணையில் பிலவேந்திரன் வீரப்பனுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகத் தெரியவந்தது.

இந்த காலக்கட்டத்தில் நேரத்தில் வீரப்பன் ராமாபுரம் காவல் நிலையத்தைத் தாக்கி 5 போலீஸாரைச் சுட்டுக் கொன்றார். மின்னியம் காட்டில் மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணா, துணை ஆய்வாளர் ஷகீல் அகமது உள்ளிட்ட 6 பேரை சுட்டுக்கொன்றார்.

பாலாறு வனப்பகுதியில் வீரப்பன் கண்ணிவெடி தாக்குதல் மூலம் 22 பேரைக் கொன்றார். இந்த மூன்று வழக்கிலும் பிலவேந்திரனை குற்றவாளியாகச் சேர்த்து கர்நாடக போலீஸார் 1993ம் ஆண்டு மே 23ம் தேதி அவரைக் கைது செய்தனர்.

8 ஆண்டுகள் நடந்த இந்த தடா வழக்குகளில் 2001ல் தீப்பு வெளியானது. அதில் பிலவேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது

பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்க‌ப்பட்டது. தூக்கு தண்டனை நெருங்கிய சமயத்தில் நால்வரும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அளித்தனர். 2013ல் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி அந்த‌ கருணை மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் பிலவேந்திரன், சைமன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு வீரப்பன் வழக்கில் தொடர்புடைய நால்வர் உட்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில் சைமன் 2018ம் ஆண்டு மைசூரு சிறையில் உயிரிழந்தார்.

அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிலவேந்திரனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கே.ஆர்.எஸ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். பிலவேந்திரனின் உடல் நேற்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கொள்ளேகால் அருகேயுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

சிறைவாசமே கொன்றது

இதுகுறித்து வீரப்பன் வழக்கில் தொடர்புடைய அன்பு ராஜ் கூறுகையில், '' நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிலவேந்திரன் ஆகியோருடன் சிறையில் இருந்திருக்கிறேன். அவர் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு மட்டுமே வாங்கிக் கொடுத்தவர். ஆனால் கூட்டாளி என போலீஸார் பொய்யாக வழக்கில் சிக்க வைத்துவிட்டனர்.

பெலகாவி சிறையில் 11 ஆண்டுகளும் மைசூரு சிறையில் 16 ஆண்டுகளும் கழித்த பிலவேந்திரன் எப்போது விடுதலை ஆவேன் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் விடுதலைக்கு இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டபோது, இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சிறைவாச மன அழுத்தமே அவரை கொன்றுவிட்டது' 'என வேதனையோடு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT