திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பு 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு ஏன் வழங்கப்பட்டது, கேரள அரசுக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தனியாரிடம் விமான நிலையத்தின் பராமரிப்பை வழங்கியதற்கு கேரளாவின் அனைத்துக் கட்சிகளும் எதிராக ஓர் அணியில் திரண்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு ெதரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட நேற்றுமுன்தினம் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பிரதமர் மோடிக்கு 2-வது முறையாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி, மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறக்கோரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சூழலில் கேரள அரசுக்கு திருவனந்தபுரம் விமானநிலைய பராமரிப்பு குத்தகை ஏன் கிடைக்கவில்லை என்பது குறித்து மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
விமாநிலையங்களை தனியார்,அரசு கூட்டாக இணைந்து பராமரிக்கும் திட்டத்துக்கான ஏலத்தில் கேரள அரசின் தொழில் மேம்பாட்டுகழகமும் பங்கேற்றது. இந்த ஏலம் வெளிப்படைத்தன்மையுடனே நடத்தப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்ற அதானி குழுமம் அதிகபட்சமாக ஒரு பயணிக்கு ரூ.168 தருவதாக ஏலத்தில் தெரிவித்தனர். ஆனால், கேரள அரசின் தொழில்மேம்பாட்டுக் கழகம் ரூ.135 மட்டுமே தருவதாகத் தெரிவித்திருந்தது. ஏறக்குறைய ரூ.63 வரை வேறுபாடு இருந்தது.
இதற்கு முன் கடந்த 6 விமானநிலையங்களையும் ஏலத்தில் விட்டபோது, அதிகமான விலைக்கு யார் கேட்டார்களோ அவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது. ஏலம் நடைபெறுவதற்கு முன், கேரள அரசும், மத்திய அரசும் பேசிக்கொண்டபடி, ஏலத்தில் வெற்றிபெறும் தனியார் நிறுவனத்தின் தொகையைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாக கேரள அரசு கேட்டிருந்தாலும் கேரள அரசுக்கே வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், கேரள அரசுக்கும், அதானி குழுமத்துக்கும் இடையிலான விலை வித்தியாசம் 19.64 சதவீதம் இருந்தது. அதனால் முதல்மறுப்பு உரிமை கேரள அரசுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச முறைப்படி வெளிப்படையாக நடந்த ஏலத்தில் கேரள அரசு தகுதி பெறமுடியவில்லை”
இவ்வாறு ஹர்திப்சிங் பூரி தெரிவித்தார்.
இதற்கிடையே திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு வழங்கியதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் இருவருக்கும் இடையே முரண்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட குத்தகையை ஜெய்ராம் ரமேஷ் எதிர்த்து வருகிறாார்,
ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்ட கருத்தில் " ஏஏஐ என்பதை அதானி ஏர்போர்ட் ஆப் இந்தியா என மத்திய அரசு மாற்றுகிறது" எனத்தெரிவித்திருந்தார்.
ஆனால், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “தனியாருக்கு இடையே போட்டியைக் கொண்டுவந்தால்தான் விமாநிலையத்தை சிறப்பாகப் பராமரி்ப்பு என்பது சிறப்பாக மாறும். திருவனந்தபுரம் மக்கள் தலைசிறந்த, முதல்தரமான, தகுதிவாய்ந்த விமானநிலையத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த கருத்து, இந்த முடிவு விவாதத்துகுரியதாக இருந்தாலும், நீண்டகாலத் தாமதம் என்பது விரும்பத்தக்கதுதான்” எனத் தெரிவித்ததுள்ளார்.
சசிதரூர் கருத்துக்கு கேரள அமைச்சர் கடக்கம்பள்ளிசுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சசி தரூரின் நிலைப்பாடு மாநிலத்துக்கான துரோகம். அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.