திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி கேரளாவில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரும் 24-ம் தேதி சட்டப்பேரவை கூட்டப்பட்டு இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏற்கெனவே அதானி குழுமம், லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமானநிலையங்களை கடந்த 2019-ம் ஆண்டு முதல் பராமரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 விமான நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயிவிஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்,
அதில் “மாநில அரசு முன்வைத்த வலிமையான வாதங்களுக்கு நம்பிக்கை அளிக்காமல், மத்தியஅரசு தன்னிச்சையாக திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்திடம் 50 ஆண்டுகள் பராமரிப்பு ஒப்படைத்துள்ளது. மக்களின் நலனுக்கு விரோதமாக இருக்கும் மத்தியஅரசின் இந்த முடிவை செயல்படுத்துவதில் கேரள அரசு ஒத்துழைப்பது கடினம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் அவசரமாக நேற்று மாலை அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயிவிஜயன் ஏற்பாடு செய்திருந்தார்.
காணொலி மூலம் நடந்த இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் “ திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பெரும்பாலான இடத்தை மாநில அரசு வழங்கியுள்ளதால், கேரள அரசு முக்கியப் பங்குதாரராக இருக்கும் போது, அதானிகுழுமத்துக்கு வழங்கியதை ஏற்க முடியாது. விமானநிலையத்துக்கான ஏலத்தில் கேரள மாநில தொழில்மேம்பாட்டுக் கழகமும் பங்கேற்றது.
அதானி குழுமம் அளித்த அதே விலையை கேரள அரசும் வழங்கத் தயார் ஆனால், அதானி குழுமத்துக்கு வழங்கக்கூடாது. கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தனியார்நிறுவனம் விமானநிலையத்தை பராமரிப்பது கடினம். மாநில அரசுக்கு சவால் விடுத்துக்கொண்டு ஒருவரும் மாநிலத்தில் தனது தொழிலை சிறப்பாக நடத்துவார் என நாங்கள் நினைக்கவில்லை. மத்திய அரசின் முடிவை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். மேலும் சட்டரீதியாக கேரள அரசு செல்லும் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சிகளும் மாநில நலன் காக்க ஒத்துழைக்க வேண்டும் .” எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த புதன்கிழமை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்று 2-வது கடித்ததை மோடிக்கு எழுதினார். “ அதில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் பராமரிப்பில் விடும் முடிவை திரும்பப்ப பெற வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
ஆனால், மத்திய அமைச்சர் வி. முரளிதரன் கடுமையாக கேரள அரசை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் “ கேரள அரசின் இரட்டை நிலைப்பாடு தெரிந்துவிட்டது. மாநிலத்தில் ஏற்கெனவே கோழிக்கோடு, கண்ணூரில் தனியார் விமானநிலையங்கள் உள்ளன. இந்த முயற்சி என்பது கேரள தங்கம் கடத்தல் வழக்கை திசைத்திருப்பும் முயற்சி” எனக் குற்றம்சாட்டினார்.