தூய்மையான முதல் நகரம் என்ற பெருமையை தொடர்ந்து நான்காவது முறையாக வென்று இந்தூர் சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தூய்மைப் பெருவிழா என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த ஐந்தாவது விருது வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வழங்கப்படும் தூய்மை ஆய்வு விருதுகள் 2020-ஐ அவர் வழங்கினார்.
இந்தியாவின் மிகத்தூய்மையான நகரம் என்ற பட்டத்தை இந்தூர் வென்றது. சூரத், நவி மும்பை ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை (ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் பிரிவில்) வென்றன. 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகமான பிரிவில் இந்தியாவிலேயே தூய்மையான மாநிலம் என்ற விருதை சத்தீஷ்கர் தட்டிச் சென்றது. 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறைவான பிரிவில் ஜார்க்கண்ட் முதலிடம் பிடித்தது. மேலும் கூடுதலாக 117 விருதுகளை அமைச்சர் வழங்கினார். (விரிவான ஆய்வு முடிவுகளை www.swachhsurvekshan2020.org என்ற தளத்தில் காணலாம்). மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைச் செயலர்
துர்கா சங்கர் மிஸ்ரா, மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள், நகராட்சி ஆணையர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த இணைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வீடுகளில் கழிவறைகள் கட்டும் திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், கழிவுகளை அகற்றுபவர்கள், தூய்மை இந்தியா (நகரம்) திட்டத்துடன் தொடர்புடைய சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் என நாடு முழுவதையும் சேர்ந்த பல்வேறு தரப்பினருடன் அமைச்சர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி வலைதளத்திலும், தூய்மை இந்தியா (நகரம்) திட்டம் கையாளும் சமூக ஊடகங்களிலும் நேரடியாக வெளியானது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி “தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் (எஸ்பிஎம்-யு) திட்டத்தின் கீழ் நிலைத்த ஆதாயங்களைத் தூய்மை ஆய்வு வழங்கும். இந்தத் திட்டம் அனைத்து நகரங்களுக்கும் இடையே முழுவதும் தூய்மை என்ற கருத்தின் அடிப்படையில் விரிவான வழிகாட்டுதல்களை அளிக்கிறது. தூய்மை, ஆரோக்கியம், அதிகாரமளித்தல், முன்னேற்றம், தன்னிறைவு புதிய இந்தியா ஆகியவற்றை உருவாக்கும் வழியை நாம் பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.
விருது வென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே உரையாற்றிய அமைச்சர், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் தூய்மை இந்தியா என்னும் கனவு கண்டார். இன்று, அந்தக் கனவை, இந்தியாவின் நகர்ப்புற மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எவ்வாறு நனவாக்கியுள்ளனர் என்பதை அறிந்து, நாம் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த இயக்கம் எவ்வாறு மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம், மிக முக்கியமாக அவர்களது சிந்தனைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் காண்கிறோம்’’, எனக்கூறினார்.
நம் இல்லங்களில் சேரும் கழிவுகளை முறையாகப் பிரித்தல், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமை, தூய்மைப் பணியாளர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து, உரிய சுகாதார முறைகளைக் கையாண்டு, உண்மையான தூய்மை வீரர் என்ற வகையில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.