பேஸ்புக் சமூகவலைத்தளம் மற்றும் அதன் இந்திய செயலதிகாரியுமான அன்கி தாஸ் ஆகியோர் அவர்களது கொள்கை நிலைப்பாடு குறித்த கேள்விகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதாவது முகநூல் பணியாளர்களே கூட இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையில் பேஸ்புக் எப்படி அரசியல் கருத்துகள் கொண்ட பதிவுகளைக் கட்டுப்படுத்துகிறது, அதற்கான கொள்கையின் பாரபட்சம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல், பாஜக அரசியல்வாதி ஒருவரின் ஒரு மதப்பிரிவினருக்கு எதிரான முகநூல் கருத்துகளை நீக்காமல், நிறுவனத்தின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான விதிமுறையைக் கடைப்பிடிக்காமல் அங்கி தாஸ் இருக்கிறார் என்று தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்கா உட்பட உலகம் முழுதும் பேஸ்புக் ஊழியர்கள் இந்தியாவில் அரசியல் கருத்துக்களை முறைப்படுத்துவது குறித்த நிறுவனக் கொள்கை சரிவர கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
மேலும் அந்தச் செய்தி நிறுவனச் செய்தி கூறுவதென்னவெனில், 11 ஊழியர்கள் பேஸ்புக் தலைமைக்கு தங்களது உள் வலைத்தளம் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கு உள்ளதை முதலில் உணர்ந்து இதற்கு எதிராக விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கொள்கை சீராக உலகம் முழுதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திறந்த கடிதம் எழுதியுள்ளனர். மேலும் இந்தியாவிலும் கொள்கைக் குழுவில் பலதரப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதாவது ஆளும் கட்சியினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்கு எதிரான கொள்கையை கறாராக கடைப்பிடித்தால் நாட்டில் அது சமூகவலைத்தள நிறுவனத்தின் வர்த்தக நலன்களைப் பாதிக்கும் என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
எனவே கருத்துக் கொள்கை பிரிவும் அரசுடனான உறவுகளும் கொள்கை மட்டத்தில் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று பேஸ்புக் பணியாளர்கள் உணர்வதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. இது தொடர்பாக சமூகவலைத்தள பணியாளர்கள் மத்தியில் உள்ளுக்குள்ளேயே ஒரு விவாதம் எழுந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.