அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்துக்களைப் பதிவிட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜாவை போலீசார் கைதுசெய்தனர்.
விசாரணையில் இந்துத்துவா அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரின் உத்தரவின் பெயரில் இதைத் செய்ததாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவதூறாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவி்ட்டதாகக் கூறி இதே பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜா கைது செய்யப்பட்டார். ஆனால், அதன்பின் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தைதத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இப்போது ராமர் கோயில் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதால் பிரசாந்த் கனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லக்னோ காவல் துணை ஆணையர் சோமன் பர்மா கூறுகையில் “ ஃபேஸ்புக் தளத்தில் ராமர் கோயில் குறித்து ஆட்சபனைக்குரிய படங்களையும், கருத்துக்களையும் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ் பதிவிட்டதால், டெல்லியிலிருந்து வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 17-ம் தேதி ஹஜாரத்கஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பிரசாந்த மீது பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்துசேனா தலைவர் சுஷில் திவாரி உத்தரவின்பெயரில் செய்தேன் எனத் தெரிவித்தார்.
ஆனால், இதை இந்துசேனா தலைவர் மறுத்துள்ளார். பிரசாந்த் ஃப்புக்கில் பதிவிட்ட கருத்தும், படமும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்தது.
இதையடுத்து, பிரசாந்த் கனோஜ் மீது ஐபிசி 420, தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்து சேனா தலைவர் சுஷில் திவாரி கூறுகையில் “ பிரசாந்த் கடந்த 17-ம் தேதி அவரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இ்ல்லை. நான் ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர், இதுபோன்று போலியான பதிவுகளை செய்யமாட்டேன்” எனத் தெரிவித்தார்
பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ் மனைவி ஜகிஷ் அரோரா நிருபர்களிடம் கூறுகையில் “ டெல்லியில் நாங்கள் வசித்து வருகிறோம். என்னுடைய பிறந்த நாளை செவ்வாய்கிழமை எனது கணவர் கொண்டாட வந்தார். அப்போது வீட்டுக்கு வந்த உ.பி. போலீஸார் எனது கணவரைக் கைது செய்தனர்.
நான் டெல்லியில் இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர் அடுத்தகட்ட பணியைச் செய்வார். நீதிமன்றம் என்ன சொல்கிறது என நாளை(இன்று) தெரியும். கரோனா காலத்தில் இவ்வாறு கடினமாக போலீஸார் நடந்து கொள்கிறார்கள். சட்டப்படி இந்த வழக்கைச் சந்திப்போம்” எனத் தெரிவித்தார்.