கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என்று விளம்பரம் வெளியிட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவலால் அந்த மாநிலத்தின் வணிகம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவர நிறுவனங்கள் வித்தியாசமான விளம்பரங்களை வெளியிட்டு தாராளமாக தள்ளுபடி வழங்கி வருகின்றன.
கேரளாவை சேர்ந்த மின்னணுபொருட்கள் விற்பனை செய்யும்கடை, எதிர்மறையான விளம்பரத்தை வெளியிட்டது. அந்த கடையில் மின்னணு பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளருக்கு 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவருக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும். இந்த சலுகை ஆக.15முதல் 30-ம் தேதி வரை அமலில்இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக வாடிக்கையாளர்கள் கடையில் குவிந்தனர்.
இதையறிந்த கோட்டயத்தை சேர்ந்த வழக்கறிஞர் பினு புளிச்சகண்டம், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார். அதில், "மின்னணு பொருட்களை விற்பனை செய்யும் கடை, சர்ச்சை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்று ஏற்பட்ட நபர்கள் கடைக்கு சென்றுபொருட்கள் வாங்க நேரிடும். வைரஸ் வேகமாக பரவும் ஆபத்துஉள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட கடைக்கு போலீஸார் விரைந்து சென்று விசாரித்தனர். அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.