இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி, கார் ஓட்டுநருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

பிடிஐ

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி, அவரது கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகிய இருவரையும் 14 நாட்களுக்கு நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவிடம் மேற்கொண்டு விசாரிப்பதற்காக அவரை போலீஸார் கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக மேற்கண்ட 3 பேரின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவர்களை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியை, 3-வதாக திருமணம் செய்தவர் இந்திராணி. முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போராவை கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் இந்திராணி. பின்னர் மும்பையை அடுத்த ராய்கட் வனப்பகுதியில் ஷீனாவின் சடலத்தை எரித்து போட்டுவிட்டு வந்துள்ளார்.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த ராகுலை ஷீனா காதலித்தது பிடிக்காமல் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இந்திராணி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் டிரைவர் ஷ்யாம் ராய் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஷீனாவின் சகோதரர் மைக்கேல் போரா, தந்தை சித்தார்த் தாஸ், பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஷீனாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எலும்புகளை தோண்டி எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT