ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
குறிப்பாக உத்தர பிரதேசத்தின் அயோத்தி, வாரணாசி, மதுரா, பிருந்தாவனம், அல்மோரா, மதுபனி உள்ளிட்ட நகரங்களில் ராம் லீலா விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா நாடகத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா கூறும்போது, "வரும் அக்டோபர் 17 முதல் 25-ம் தேதி வரை ராம் லீலா நாடகத்தை அரங்கேற்ற உள்ளோம். இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்தார். உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் கூறும்போது, "கரோனா வைரஸ் தொற்று குறைந்தால் பொதுமக்கள் முன்னிலையில் நாடகம் அரங்கேற்றம் செய்யப்படும். இல்லையெனில் படப்பிடிப்பு நடத்தி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்,யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்" என்று தெரிவித்தன. போஜ்புரி நடிகரும் கோரக்பூர் எம்.பி.யுமான ரவி கிஷண், பரதனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, பாலிவுட் நடிகர் பிந்து தாராசிங் உள்ளிட்ட பலர் ராம் லீலாவில் நடிக்க தயாராகி வருகின்றனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகை ராமர், சீதையாக வேடம் ஏற்பார்கள், இப்போதைக்கு அவர்கள் பெயர்களை வெளியிட முடியாது என்று உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.